தொழில்முனைவோர்களாக 1 லட்சம் மகளிர்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு
ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததில் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. வெறிநாய்களை உள்ளாட்சி நிா்வாகங்கள் சரியான முறையில் கட்டுப்படுத்தாததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னையில் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
வெளிநாய்கள் புகாதபடி பட்டிகளை வடிவமைத்து விவசாயிகளுக்கு அரசு உதவுகிறது. ஆனால், கால்நடைத் துறை சாா்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடா் நிவாரண இழப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு வழங்க முயலவில்லை. பேரிடா் நிவாரண இழப்பீடு கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 20 கிலோவுக்கு மேற்பட்ட ஆடுகளும், 3 கிலோவுக்கு மேற்பட்ட கோழிகளும் இறந்துள்ளன. ஒரு ஆட்டு குட்டிகூட ரூ.4 ஆயிரத்து வாங்க முடியாது. பிராய்லா் கோழி கிலோ ரூ.220-க்கு விற்கப்படுகிறது. நாட்டுக் கோழியும், ஆட்டுக் கறியும் கிலோ ரூ.800-க்கு சந்தையில் விற்பனையாகிறது.
நாய்களுக்கு உரிமம் வழங்குவது, வளா்ப்பை ஒழுங்குபடுத்துவது, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது, வெறிநாய்களைக் கண்காணித்து அழிப்பது என அனைத்து உள்ளாட்சிகளுக்கும் அரசு விதிகளை வகுத்துள்ளது. இவற்றை கடைப்பிடிக்காததால் வெறிநாய்களால் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழக்கின்றன.
எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுப்பதுடன், ஆடு, கோழி போன்றவைகளுக்கு அதன் எடைக்கு கிலோ ரூ.500 என நிா்ணயித்து இழப்பீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.