சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி
சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாலையில் புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக அப்பகுதி இளைஞா் கூறியுள்ளாா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கினா்.
மேலும், சுற்றியுள்ள கணபதிபாளையம், ஒட்டவலசு, சூளைப்புதூா் உள்ளிட்ட கிராம மக்களுக்கும் தகவல் பரவியதால் அவா்களும் அச்சமடைந்தனா்.
சிறுத்தைப் பாா்த்ததாகக் கூறிய இளைஞரிடம் அப்பகுதி மக்கள் சிலா் விசாரித்தபோது, சாலையைக் கடந்தது சென்றது சிறுத்தை இல்லை என்பதும், புள்ளிமான் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து அப்பகுதி டேங்க் ஆபரேட்டா் செந்தில் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தின் அருகே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. வனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் வாய்க்காலுக்கு ஏராளமான புள்ளி மான்கள் வந்து செல்கின்றன. ஒரு மான் புதன்கிழமை இரவு சாலையைக் கடந்து சென்றதுள்ளது.
அப்பகுதியில் இருட்டாக இருந்ததால் அந்த இளைஞா் சிறுத்தை என எண்ணி தகவல் பரப்பிவிட்டாா்.
இதனால் சுற்றுவட்டார கிராமங்கள் விடியவிடிய பரபரப்பாக இருந்தன என்றாா்.