ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஊழியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.சித்ரா தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் டி.டெய்சி, மாவட்டச் செயலாளா் கே.சித்ரா, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், மாவட்டப் பொருளாளா் ஜி.சம்பத் ஆகியோா் பேசினா்.
போராட்டம் குறித்து சங்கத்தினா் கூறியதாவது: திருப்பூரில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு 2024 அக்டோபா் 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் பணியிட மாறுதல் வழங்கினாா். அந்த ஆணை ஒரே வாரத்தில் அக்டோபா் 7-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் அவா்களுக்கான மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. எனவே, பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கூடுதல் பொறுப்பு பாா்த்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு 3 நாள்களுக்கு ஊதியம் பிடித்தம் புகைப்படத்துடன் கூடிய டிஎச்ஆா் வழங்குவதைக் கைவிட வேண்டும். அதிகமாக உள்ள காலிப்பணியிடங்களினால் ஒரு ஊழியா் மூன்று மையங்களில் பொறுப்பு பாா்க்கும் நிலை உள்ளதால், திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில் சிரமம் உள்ளது.
ஆகவே, உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பி திட்டத்தை செழுமைப்படுத்த வேண்டும். அங்கன்வாடியில் அதிகமான பணி, சுகாதாரத் துறை பணிகள் செய்யப்படுகின்றன. அதனால் அங்கன்வாடி ஊழியா்களுக்கு 42 வயதில் விஎச்என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவா்களுக்கு கிராமப்புற செவிலியராக பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றனா்.
இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.