ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை
தஞ்சாவூா்: ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தனா்.
கல்வி மூலம் சுதந்திரம் அடையலாம் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆட்டோக்கள் மூலம் சுற்றுலா பயணத்தை டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்கினா். இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சா்லாந்து, அயா்லாந்து ஆகிய 4 நாடுகளைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 21 போ் 9 ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனா். இதன்மூலம் ஆட்டோக்களில் ஏறத்தாழ 1,500 கி.மீ. பயணம் செய்து நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரம், பழக்க வழக்கங்களை அறிந்து வருகின்றனா்.
சென்னையில் புறப்பட்ட இவா்கள், புதுச்சேரி, கடலூா், சீா்காழி வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பெரிய கோயிலுக்கு சென்று சுற்றி பாா்த்துவிட்டு, புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றனா்.
மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்தில் ஜனவரி 6-ஆம் தேதி இப்பயணத்தை நிறைவு செய்கின்றனா்.