நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!
ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இலக்கியங்களை புழக்கத்திலிருந்து அகற்றும் பணியில் தாலிபன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு தாலிபன் ஆட்சிக்கு வந்தவுடன் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற ஒரு கமிஷன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் இஸ்லாமிய மற்றும் ஆப்கன் மதிப்புகளுடன் முரண்படக்கூடிய 400 புத்தகங்களை ஆணையம் கண்டறிந்துள்ளது. அவற்றில் பெரும்பாலனவை சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்டது என அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் பணியிலும் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக குரான் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களை விநியோகித்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
நீக்கப்பட்ட புத்தகங்களுக்கான புள்ளி விவரங்களை அமைச்சகம் அறிவிக்கவில்லை, ஆனால் தாலிபன் ஆட்சியின் முதல் ஆண்டிலும், சமீபத்திய மாதங்களிலும் நூல்கள் சேகரிக்கப்பட்டதாக காபூலில் உள்ள வெளியீட்டாளர் மற்றும் அரசாங்க ஊழியர் ஒருவர் கூறியுள்ளனர். "புத்தகங்களுக்கான தணிக்கை அதிகளவில் உள்ளது, இதனால் வேலை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் அனைத்து இடங்களிலும் பயம் பரவியுள்ளதாக" வெளியீட்டாளர் AFP-யிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ``தாலிபன்களால் அகற்றப்பட்ட முந்தைய வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட புத்தகங்கள், தாலிபன் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அதிகப்படியான ஊழல், அழுத்தங்கள் மற்றும் பிற சிக்கல்களும் இருந்தன. ஆனால் பயமில்லாமல், ஒருவர் தன்னுடைய கருத்துகளை கூறுகிற நிலை இருக்கிறது" என்கிறார். தகவல் அமைச்சக அதிகாரிகளிடமிருந்து தடை செய்யப்பட்ட ஐந்து தலைப்புகளின் பட்டியலை AFP பெற்றுள்ளது. அதன்படி புகழ்பெற்ற லெபனான் - அமெரிக்க எழுத்தாளர் கலீல் ஜிப்ரான் எழுதிய 'மனித குமாரன் இயேசு '( Jesus The Son of Man) அவதூறான வெளிப்பாடுகளை உள்ளடக்கியதற்காகவும்... அல்பேனிய எழுத்தாளர் இஸ்மாயில் கதேராவின் Twilight of the Eastern Gods என்ற எதிர்கலாச்சார நாவலும் தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் கீழ் கல்வி அமைச்சராக இருந்த மிர்வைகிஸ் பால்கியின் 'ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்தியம்: மேற்கு ஆசிய பார்வை' எதிர்மறையான பிரச்சாரத்திற்காக தடை செய்யப்பட்டுள்ளது.
1996 முதல் 2001 வரையிலான முந்தைய தாலிபன் ஆட்சியின் போது, ஒப்பீட்டளவில் சில பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் இருந்தனர். அண்டை நாடான ஈரானிலிருந்து மட்டும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை தடுக்கிற வகையில் கடந்த வாரம் தாலிபன் அதிகாரிகள் ஹராத் நகரின் சுங்க கிடங்கில் உள்ள பெட்டிகளை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
"எந்த ஒரு குறிப்பிட்ட நாடு மற்றும் தனிப்பட்ட நபர்களின் புத்தகங்களை நாங்கள் தடை செய்வதில்லை, ஆனால் மதம், இஸ்லாமிய சட்டம் அல்லது அரசாங்கத்திற்கு முரணான அல்லது உயிரினங்களின் புகைப்படங்கள் இருந்தால் அவற்றை நாங்கள் தடுக்கிறோம்" என நற்குணங்களை ஊக்குவிக்கும் மற்றும் தீமைகளை தடுக்கும் ஹெராத் துறையின்( the Propogation of Virtue and the Prevention of Vice) அதிகாரி முகமது சதீக் காதெமி கூறியுள்ளார்.
மேலும் "எந்த புத்தகங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பொருத்தமற்றதாக கருதப்படும் புத்தகங்களை திருப்பிக் கொடுத்து பணத்தை பெறுவதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால், அவற்றை கைப்பற்றுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்றார்.