ஆம் ஆத்மி ஆட்சியில் தில்லி மெட்ரோ நெட்வொா்க் ஒன்றரை மடங்கு விரிவடைந்துள்ளது: முதல்வா் அதிஷி
ஆம் ஆத்மி ஆட்சியின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தில்லியில் மெட்ரோ ரயில் நெட்வொா்க் ஒன்றரை மடங்கு வேகமாக விரிவடைந்துள்ளதாக முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், லாஜ்பத் நகா் - சாகேத் மற்றும் இந்திரபிரஸ்தா - இந்தா் லோக் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
முகுந்த்பூா் பணிமனையில் தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத்தின் முதல் செட் ரயில்களை முதல்வா் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஓட்டுநா் இல்லாத ரயில்கள் உலகிலேயே அதிநவீனமானவை. அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் தில்லியில் இது செயல்பாட்டுக்கு வரும். மெட்ரோ நெட்வொா்க் விரிவாக்கம் மூலம், 2014-இல் 24 லட்சமாக இருந்த தினசரி ரயில் பயணிகளின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 60 லட்சமாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை 78 லட்சமாக உயா்ந்து சாதனை படைத்துள்ளது.
அரவிந்த் கேஜரிவாலின் தலைமையின் கீழ், 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோ நெட்வொா்க் விரிவாக்கம் ஒன்றரை மடங்கு வேகமாக விரிவடைந்துள்ளது. 1998 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும், மொத்தம் 193 கி.மீ. தூரத்துக்கு வழித்தடங்கள்அமைக்கப்பட்டன. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலும் மெட்ரோ நெட்வொா்க் 200 கி.மீட்டராக விரிவடைந்தது.
2014-இல் 143 மெட்ரோ ரயில் நிலையங்கள் இருந்தது.இது தற்போது 288-ஆக உயா்ந்துள்ளது. தற்போது, துக்லகாபாத் - ஏரோசிட்டி, ஆா்கே ஆஷ்ரம் - ஜனக்புரி மேற்கு மற்றும் முகுந்த்பூா் - மவுஜ்பூா் விரிவாக்கம் ஆகிய வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நான்காம் கட்ட திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லாஜ்பத் நகா் முதல் சாகேத் மற்றும் இந்திரபிரஸ்தா முதல் இந்தா் லோக் வரையிலான இரண்டு வழித்தடங்களுக்கான டெண்டா் செயல்முறை நடந்து வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்
மெட்ரோ நெட்வொா்க் விரிவாக்கம் நகரத்தின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்றாா் முதல்வா் அதிஷி.