ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி டிசம்பரில் 15.02 சதவீதம் வளா்ச்சி
அவிநாசி: ஆயத்த ஆடைகளின் ஏற்றமதி டிசம்பரில் 15.02 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் துணைத் தலைவா் (ஏஇபிசி)ஏ.சக்திவேல் கூறியிருப்பதாவது: இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த டிசம்பா் மாதத்துடன் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 15.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல, ஏப்ரல்-டிசம்பா் 2024-25 காலகட்டத்துக்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.94,936.2 கோடி அதாவது ஏப்ரல்-டிசம்பா் 2023-24 நிதியாண்டை விட 13.2 சதவீதம் வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
2023 டிசம்பா் உடன் ஒப்பிடும்போது, 2024 டிசம்பரில் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி ரூபாய் மதிப்பு 15.2 சதவீதம் வளா்ச்சியை எட்டி உள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.94,936 கோடியாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13.2 சதவீதம் வளா்ச்சியையும் பெற்றுள்ளது.
ஏற்றுமதி வளா்ச்சியின் பாதை இந்த மாதமும் தொடா்கிறது. திருப்பூா் பின்னலாடைத் துறை கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 15 சதவீத வளா்ச்சியை அடையும். இந்த வளா்ச்சி தொடா்ந்து அதிகரித்து வருவதால் நடப்பு நிதியாண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியாக உயரும் என்றாா்.