3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பலியான ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்புவதாக, பலியான பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, ``மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எங்கள் மகள் பெரிய கனவு கண்டாள். ஆனால், அவள் இப்படி இறக்க வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை. அவள் எங்களைவிட்டுச் சென்று 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றளவிலும் நீதி கிடைக்கவில்லை. எங்களிடம் இறப்புச் சான்றிதழ்கூட இல்லை.
ஒரு பெண் மருத்துவர், தனது பணியிடத்தில் பாதுகாப்பற்றவராக இருந்தால், அவரது பாதுகாப்பு எங்குதான் உள்ளது? நான் பிரதமரைச் சந்தித்து, இந்த வழக்கில் தலையிட்டு, இறந்த எங்கள் மருத்துவருக்கு நீதிக்கான எங்கள் முறையீட்டைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு, ஜனவரி 20 ஆம் தேதியில் மரணம் வரையிலான ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.