கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?
பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை என்றும், அறிவிக்கப்பட்ட 66 ஆயிரம் பணியிடங்களுக்கான முடிவுகளிலும் குளறுபடிகள் நீடிப்பதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) சார்பில் ஆசிரியர் பணி நியமனத் தேர்வு 3.0 தேர்வுக்கான முடிவுகள் ஜனவரி 22ஆம் தேதி வெளியானது. தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என பல்வேறு பிரிவுகளில் இத்தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், ஆசிரியர் பணி நியமனத் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி பிகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பிகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களில் ஒருவரான விக்ரம் குமார் பேசியதாவது,
பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத் தேர்வு எழுதியுள்ளோம். தேர்வு நடந்தபோது 87,774 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், 66,000 பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 21,000 காலிப் பணியிடங்களின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை.
66 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு தரவுகளை பார்க்கும்போது அதிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு நடைபெற்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியானது. இதில் 35,000 - 40,000 தேர்வர்களின் முடிவுகள் மட்டுமே தெரியவந்துள்ளது. ஒரு தேர்வரின் பெயர் மூன்று விதமான பட்டியலிலும் உள்ளது. அவர் ஒரு பிரிவில் பணிக்குச் சேர்ந்தால், மற்ற இரு பிரிவுகளிலும் அப்பணி காலிப் பணியாகவே இருக்கும்.
அவ்வாறு காலிப் பணியிடங்களைத் தவிர்க்க துணைத் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 49 நாள்களாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆளும் கட்சியிலிருந்து ஒருவரும் எங்களை இதுவரை வந்து சந்தித்ததில்லை.
தேஜஸ்வி யாதவ் எங்களுக்கு ஆதவு அளித்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் கோரிக்கையை அவையில் அவர் முன்வைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.