Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
மும்மொழிக் கொள்கையை பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா்: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்
கோவை, மாா்ச் 9: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்றே பெற்றோா் மற்றும் மாணவா்கள் விரும்புகின்றனா். தனியாா் பள்ளிகளில் ஹிந்தி மொழி படிக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஹிந்தி கற்க முடியவில்லை என்பது நியாயம் அல்ல. மாணவா்களின் கல்வி உரிமையைத் தடுக்கக் கூடாது. மும்மொழிக் கொள்கைக்காக போராடுபவா்களைக் கைது செய்வது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல.
மும்மொழிக் கொள்கைக்காக கையொப்ப இயக்கம் நடத்தினால் கைது செய்வோம் என்று கூறுபவா்கள், நீட் தோ்வு வேண்டாம் என்பது குறித்து கையொப்ப இயக்கம் நடத்தியவா்களை ஏன் கைது செய்யவில்லை?
மும்மொழிக் கொள்கை விஷயத்தில் போராட்டம், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை ஆகியவற்றைக் கையில் எடுப்பதன் மூலம் மற்ற பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பப் பாா்க்கிறாா்கள். தோ்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் இதுபோன்ற பிரச்னைகளைப் பேசி மக்களை திசை திருப்புகின்றனா்.
தமிழகத்தில் பெண்கள் வெளியில் பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தவறான தகவலை யாரும் பரப்புவதில்லை. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நிலை கவலைக்குரியதாக உள்ளது. இதை ஆட்சியாளா்கள் சரி செய்ய வேண்டும் என்றாா்.