தமிழக துணை முதல்வரிடம் மனு: டாஸ்மாக் கடை மூடப்பட்டது
தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனு அளிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது.
பூந்தோட்டம்-நாச்சியாா்கோயில் நெடுஞ்சாலையில் மருதவாஞ்சேரியில் பேருந்து நிறுத்தம் அருகே பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதனால் இந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். எனினும், டாஸ்மாக் கடை அகற்றவில்லை.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அண்மையில் திருவாரூா் வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மருதவாஞ்சேரியில் உள்ள மொழிப்போா் தியாகி சாரங்கபாணி வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றாா் . அப்போது, அப்பகுதியைச் சாா்ந்த பெண்கள் மற்றும் மாணவிகள் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தனா். மனுவைப் பெற்ற துணை முதல்வா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.