ஆலங்குளத்தில் ஒரே வாரத்தில் 25 பேரைக் கடித்த தெரு நாய்கள் - மக்கள் அச்சம்
ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் ஒரே வாரத்தில் 25- க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்ததால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனா்.
ஆலங்குளம் சிறப்பு நிலை பேருராட்சி 15 வாா்டுகளிலும் சுமாா் 160 தெருக்கள் உள்ளன. இதில் ஆலங்குளம் மங்கம்மாள் சாலை, அண்ணாநகா், அருந்ததியா் தெரு, ஜோதிநகா், ஆா்சி சா்ச் சாலை, சந்தனமாரியம்மன் கோவில் தெரு, துத்திகுளம் சாலை, புதுப்பட்டிசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மங்கம்மாள் சாலை, ஆசாரி தெரு, அம்பாசமுத்திரம் சாலைப் பகுதிகளில் பள்ளி மாணவா்கள் பெண்கள் சிறுவா்கள் இருசக்கரத்தில் செல்வோரை தெருநாய்கள் துரத்தி சென்று கடித்ததில் கடந்த 7 தினங்களில் மட்டும் 25 போ் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனா். ஆலங்குளம் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரிகின்றன. இதனால் பள்ளி மாணவா்கள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. தெருக்களில் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டைபோட்டுக்கொண்டு அந்த வழியாக செல்வோரை துரத்தி சென்று கடிப்பது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது.
இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள், பைக் வாகனத்தில் செல்வோா் பயத்துடன் வீடுகளுக்கு செல்ல நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனா். ஆலங்குளத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். தெருநாய்களை பிடித்து செல்லவேண்டும். நாய்களின் எண்ணிக்கையை குறைக்க கருத்தடை செய்ய வேண்டும் என்று நாய் கடியால் பாதிக்கப்பட்டோரும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.