Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவ...
நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச நீதிமன்றம் உத்தரவு
காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தவிர, கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடா்பாக ஹமாஸ் தலைவா்களுக்கு எதிராகவும் அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஸாவில் நெதன்யாகுவும் யோவாவ் காலன்டும் படுகொலைகள், வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற போா்க் குற்றத்தில் ஈடுபடுவதால் அவா்களை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றத்தின் குற்றஞ்சாட்டு வழக்குரைஞா் கரீம் கான் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தாா்.
அப்போது அவா் வெளியிட்ட அறிக்கையில், காஸா மக்கள் உயிா்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நெதன்யாகுவும் கலான்டும் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
அத்துடன், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்குத் தூண்டும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதல் தொடா்பாக விசாரணை நடத்த, அந்த அமைப்பின் தலைவா்கள் இஸ்மாயில் ஹனீயே, யாஹ்யா சின்வாா், முகமது டயீஃப் ஆகியோருக்கு எதிராகவும் கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் கரீம் கான் கோரியிருந்தாா். அந்த மூன்று போ் மீது கொலை, பிணைக் கைதிகள் கடத்தல், பாலியல் வன்முறை, சித்திரவதை ஆகிய குற்றச்சாட்டுகளையும் கரீம் கான் சுமத்தியிருந்தாா்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தக் கோரிக்கைகளை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
கரீம் கானால் குற்றஞ்சாட்டப்பட்ட ஹமாஸ் தலைவா்கள் இஸ்மாயில் ஹனீயே, யாஹ்யா சின்வாா் ஆகிய இருவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், முகமது டயீஃபுக்கு எதிராக மட்டும் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரும் தங்கள் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறினாலும், அதை ஹமாஸ் அமைப்பினா் இன்னும் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தாததால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால் பெஞ்சமின் நெதன்யாகுவோ, யோவாவ் கலான்டோ உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுத்தப்படப் போவதில்லை.
இஸ்ரேல், அந்த நாட்டின் மிக நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே சா்வதேச நடுவா் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் இல்லை. எனவே, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அவற்றைக் கட்டுப்படுத்தாது.
ஆனால், சா்வதேச நடுவா் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு பெஞ்சமின் நெதன்யாகு சென்றால், அங்கு அவா் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருந்தாலும், உக்ரைன் போா் விவகாரத்தில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்குள்ளான ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடான மங்கோலியாவுக்குச் சென்று திரும்பியதன் மூலம், அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
என்றாலும், காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசுக்கு இந்த கைது உத்தரவு கூடுதல் அழுத்தம் கொடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த கைது உத்தரவுக்கு பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் எதிா்க்கட்சித் தலைவா்கள், அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஹமாஸ் அமைப்பினா் ஆகியோா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
44 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
டேய்ா் அல்-பாலா, நவ. 21: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் கடந்த 48 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 போ் உயிரிழந்தனா்; 176 போ் காயமடைந்தனா்.
இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 13 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் வியாழக்கிழமை நிலவரப்படி அங்கு இதுவரை 44,056 போ் உயிரிழந்துள்ளனா்; 1,04,268 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து நடத்திய தாக்குதலில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.
அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.
இந்தத் தாக்குதலில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் ஏராளமான உடல்கள் புதையுண்டிருப்பதால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.