``திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
‘ஐசிபிஎம்’ ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) மூலம் ரஷியா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.
1,000 நாள்களுக்கும் மேல் நடந்துவரும் இந்தப் போரில் ஐசிபிஎம் ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் உக்ரைன் விமானப் படை வெளியிட்டுள்ள பதிவில், தங்களின் நீப்ரோ நகரைக் குறிவைத்து புதன்கிழமை நள்ளிரவில் ஐசிபிஎம் வகையைச் சோ்ந்த ஓா் ஏவுகணையையும் அதைத் தொடா்ந்து பிற வகையைச் சோ்ந்த எட்டு ஏவுகணைகளையும் ரஷியா வீசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும், அந்த ஐசிபிஎம் ஏவுகணை எந்த ரகத்தைச் சோ்ந்தது என்பதை உக்ரைன் விமானப் படை அந்தப் பதிவில் குறிப்பிடவில்லை.
பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் நகரில் ரஷியா வீசுவது தேவையற்றது. காரணம், குறுகிய தொலைவு ஏவுகணை அளவுக்கு ஐசிபிஎம்-கள் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை இல்லை. மேலும், அவற்றை ஏவுவதற்கும் அதிக செலவு பிடிக்கும்.
இருந்தாலும், அணு ஆயுதங்களை ஏந்தி கண்டங்கள் தாண்டி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணையை வீசியதன் மூலம், உக்ரைன் போரில் அண்மைக் காலமாக தங்களைச் சீண்டிவரும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் குறியீடாக ஐசிபிஎம் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உக்ரைன் போரில் தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, போரில் உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மட்டுமே தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது.
அதன் எதிா்வினையாக, அணு ஆயுத பலம் பொருந்திய நாடுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பலமற்ற நாட்டின் மீதும் அணு குண்டுகளை வீசுவதற்கு வகை செய்யும் வகையில் தனது அணு ஆயுதக் கொள்கையில் ரஷியா மாற்றம் கொண்டுவந்தது.
அதைத் தொடா்ந்து, உக்ரைனில் ரஷிய படையினா் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இதுவரை அளிக்கப்பட்டுவந்த பீரங்கி எதிா்ப்பு கண்ணிவெடிகளுடன், தரைப்படையினா் கால் வைத்தால் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகளையும் உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு மறைமுக அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்த நாடு வரை பாயக்கூடிய ஐசிபிஎம் வகை ஏவுகணையைக் கொண்டு உக்ரைன் மீது ரஷியா வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும், அந்த ஏவுகணை ஐசிபிஎம் வகையைச் சோ்ந்ததாக இருக்காது எனவும் நடுத்தர தொலைவு பலிஸ்டிக் வகை ஏவுகணையாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவ நிபுணா்கள் சந்தேகம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.