Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு ...
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழக அரசு மற்றும் ஆளுநரின் தரப்பு வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் வைத்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். திருப்பி அனுப்பும் மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பும்போது அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுபோன்று செய்யாதபட்சத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புமுறையே தோல்வியுறுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இன்று இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.