இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!
இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச் பவுண்டேஷனிடமிருந்து சுமார் 7,50,000 பிரிட்டன் பவுண்ட் அளவிலான பணத்தை வென்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதனை, நம்பிய அவர் அவர்களை தொடர்புக்கொண்ட போது ரூ.16,700 பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்புமாறு கூறி ஏமாற்ற முயன்றுள்ளனர்.
இதனால், அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 419, 420 உடன் 511 மற்றும் 120-B மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவுகள் 66A (b) & (c) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக சிபிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஒசின் டேனியல் என்பவரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், இதில் தொடர்புடைய மற்றொரு நபரான அடியா ஒக்கோ என்பவர் தலைமறைவான நிலையில் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடியா ஓக்கோ (எ) ஒடியா ஃபிரான்சிஸ் எஹிஸோஜி குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரை மும்பை விமான நிலையத்தில் பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2015 டிசம்பரில் அடியா ஒக்கோ மற்றும் ஒசின் டேனியல் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட அடியா ஓகோவை புது தில்லியிலுள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தின் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் குற்றவாளியாக அறிவித்தார். மேலும், அவரைப் பிடிக்க அவருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கைகளும் (LOCs) வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.