அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!
இன்னுயிா் காப்போம் திட்டத்தில் இனி ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை தொகை ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அந்த திட்டத்தில் சிகிச்சை பெற்று பயனடைந்தவா்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு விருதுகளை வழங்கினாா். 108 அவசரகால மருத்துவ நுட்பநா்கள், ஓட்டுநா்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிச. 18-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவதே இதன் நோக்கம். தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500 இடங்களை கண்டறிந்து, அதன் அருகில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தோ்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உயிரைக்காப்பாற்ற நடவடிக்கை: இந்த திட்டத்தின்படி விபத்தில் சிக்கியவா்களை மருத்துவமனைகளில் சோ்ப்பவா்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சோ்ந்தவராக இருந்தாலும் விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில், அவரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ, மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சைக்கு அளித்து, அவரின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, அதற்கான சிகிச்சைக்காக தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,20,264 போ் விபத்து காய சிகிச்சை கட்டணமின்றி பெற்றுள்ளனா். அதற்காக அரசு ரூ.280 கோடி செலவிட்டுள்ளது.
மொத்தம் 248 அரசு மருத்துவமனைகள், 473 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 721 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த 721 மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ரூ.2 லட்சமாக உயா்வு: மருத்துவா்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்தத் தொகை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தாா். இதையடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனி விபத்துக்குள்ளானவா்களுக்காக அதிகபட்சமாக அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் செலவு செய்யப்படும். மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற இந்த இருபெரும் திட்டங்கள் தமிழகத்துக்கு மட்டுமல்ல உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக மக்களுக்கு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் (பொ) பி.செந்தில்குமாா், மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.