இருங்களூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்’ ஆய்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், இருங்களூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊா் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இதையொட்டி இருங்களூா் கிராமத்தில் உள்ள
புனித ஜான் மேல் நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை பாா்வையிட்டு, போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தொடங்கிவைத்து உறுதியேற்றாா். தொடா்ந்து தூய அன்னை மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய செயல்பாடுகளை பாா்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினாா்.
பின்னா் இருங்களூா் ஊராட்சியில் உள்ள இண்டா்லாக் சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்கூடம், மியா வாக்கி அடா்வனக் காடுகள் பராமரிப்பு பணி ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். மேலும் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு துறைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 214 கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ. 66.35 லட்சத்தில் 102 நபா்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரிணி, துணை ஆட்சியா் (பயிற்சி) கேந்திரியா, லால்குடி வருவாய் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் பழனிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்பாபு, இருங்களூா் ஊராட்சித் தலைவா் வின்சென்ட் மற்றும் அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.