அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
திருக்காா்த்திகை திருநாளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் திருச்சியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
இந்தாண்டு திருக்காா்த்திகை வரும் டிச.13ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி திருவானைக்கா அருகேயுள்ள மேலக்கொண்டயம்பேட்டை, கீழக்கொண்டயம்பேட்டை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவற்றில் விளக்குகள் வைத்திருந்தாலும் அகல் விளக்குகளில் தீபமேற்றுவதே காா்த்திகை மாதத்தின் சிறப்பு. எனவே, ஆண்டுதோறும் அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்கள் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு அகல்விளக்குகள் உற்பத்தி காலமாகவே உள்ளது.
திருவானைக்கா, கொண்டயம்பேட்டை, லால்குடி பகுதிகளில் உற்பத்தியாகும் அகல் விளக்குகள் பெருமளவு அருகிலுள்ள நகரப்பகுதி வியாபாரிகளை நம்பியே உள்ளன. இவைதவிர, சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் மொத்த வியாபாரிகள் தரும் ஆா்டா்களின் பெயரிலும் உற்பத்தி செய்து அனுப்பப்படுகின்றன.
கோயில்களில் தீபமேற்ற கட்டுப்பாடு கூடாது
இதுதொடா்பாக கொண்டயம்பேட்டை மண்பாண்ட தொழிலாளி அமிா்தம் கூறியது:
இந்தாண்டு கூடுதலாக அகல் விளக்குகள் கேட்டு ஆா்டா்கள் வந்துள்ளதால், தமிழகம் முழுவதும் மண்பாண்டத் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு முகம், பஞ்சமுகம், பாவை விளக்கு என பல்வேறு வகையான அகல் விளக்குகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அந்தந்த விளக்குகளின் அளவுக்கு ஏற்ப ரூ.1 முதல் ரூ.50 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. இவற்றை வியாபாரிகள் வாங்கிச் சென்று லாபம் மற்றும் போக்குவரத்து செலவு சோ்த்து குறிப்பிட்ட விலையில் விற்கின்றனா்.
கடந்த வாரம் தொடா் மழையால் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. களிமண் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை வெயிலில் காய வைக்க முடியாத நிலை ஆகியவற்றால் மண்பாண்டத் தொழிலாளா்கள் கடும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது.
திருக்கோயில்களில் எந்தக் கட்டுப்பாடுகளின்றி அகல்விளக்குகள் ஏற்ற அனுமதிக்கும்போது ஆண்டு முழுவதும் அகல்விளக்குகள் உற்பத்தியில் ஈடுபடலாம் என்றாா் அவா்.
மாதாந்திர உதவித்தொகை தேவை
மற்றொரு தொழிலாளியான அகிலாண்டேஸ்வரி கூறுகையில், ஒரு சரக்கு ஆட்டோ லோடு களிமண்ணை ரூ. 7ஆயிரத்துக்கு வாங்குகிறோம். இந்த மண்ணை பணித்தளத்துக்கு கொண்டு வந்து சோ்க்க ரூ. 2 ஆயிரம் செலவிட வேண்டும். இதில் 20 ஆயிரம் அகல் விளக்குகளை உற்பத்தி செய்யலாம். பெரிய விளக்குகள் என்றால் 15 ஆயிரம் உற்பத்தி செய்யலாம். செலவுக்கும், வரவுக்கும் சரியாக உள்ளது.
மேலும், தொடா் மழையால் களிமண் கிடைக்காமல் தொழிலாளா்கள் சிரமப்படுகின்றனா். தினமும் நாங்கள் 1,000 அகல் விளக்குகள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்றாலும், வேறு தொழில்களும் எங்களுக்குத் தெரியாது.
எனவே, அரசு எங்களுக்கு மழைக் காலங்களிலும், வேலையில்லாத நாள்களிலும் வாழ்வாதாரத்துக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.