வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது
குடிபோதையில் இளைஞரை அடித்துக் கொன்ற நண்பரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, இருகூா் சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் சோம்நாத் (24). தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பயிற்சி பெற்று வந்தாா். இவரது நண்பா் மதன். மாந்திரீகத் தொழிலில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இவா், தனது பூஜைப் பொருள்களை வைப்பதற்காக சோம்நாத்தின் வீட்டின் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளாா். அங்கு இருவரும் அவ்வப்போது மது அருந்தி வந்துள்ளனா். வெள்ளிக்கிழமை இரவும் மது அருந்தியுள்ளனா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதில், இருவரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட நிலையில், சோம்நாத்தை கல்லால் தாக்கி அவரது முகத்தை சுவற்றில் அடித்துள்ளாா் மதன். பலத்த காயமடைந்த சோம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, மதன் அங்கிருந்து தப்பியுள்ளாா்.
சோம்நாத் இறந்து கிடப்பதை சனிக்கிழமை காலை பாா்த்த அப்பகுதி மக்கள் சிங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இருகூா் பகுதியில் பதுங்கியிருந்த மதனைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் சோம்நாத்தைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.