உ.பி: கோயிலில் ஏ.சி-யிலிருந்து வெளியேறும் நீரை `தீர்த்தம்' என அருந்தும் பக்தர்கள்! - Viral Video
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவின் பிருந்தாவனில் பாங்கே பிஹாரி மந்திர் எனும் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, யானை தலை சிற்பத்தின் வாய் வழியே வழிந்த தண்ணீரை 'தீர்த்தமாக' பிடித்து அருந்தி வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சிலர் கைகளில் பிடித்து குடிப்பதும், சிலர் பிளாஸ்டிக் கோப்பை போன்ற பொருளில் நிரப்பி குடிப்பதும், எதுவும் இல்லாதவர்கள் உள்ளங்கையில் நீரைப் பிடித்துக் குடிப்பதும் பதிவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து வெளியான செய்தியில், அந்த யானை சிற்பத்தின் வாய் வழியே வரும் தண்ணீர் தீர்த்தமல்ல என்பது தெரியவந்திருக்கிறது.
அது ஏசி தண்ணீர் வெளியேற வைக்கப்பட்ட பைப்பிலிருந்து கசிவது என்பதும் தெரியவந்திருக்கிறது. ஆனாலும், மக்கள் வரிசையில் நின்று பிடித்துக் குடிக்கிறார்கள். இந்த வீடியோவுக்கு கீழே , ``அறிவியல் ரீதியாக ஒரு விஷயத்தை அணுகும் மனோபாவம் இல்லாதவர்கள், கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள், வெறுப்பு, குழு மனப்பான்மையுடன் இயங்குவார்கள். அதற்கு இது உதாரணம்" என்றும், ``ஏன் யாரும் ஒரு நொடி கூட நின்று, இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி யோசிக்கவில்லை? இப்படி ஒரு மனநிலை எப்படி உருவானது?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ``இந்த மந்தை மனநிலை நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்" என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், லிவர் டாக் நிறுவனம் ஒரு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``ஏசியிலிருந்து வெளியேறும் தண்ணீரைக் குடிக்க வேண்டாம். கூலிங் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் உருவாகும் தண்ணீரில் பூஞ்சை உட்பட பல வகையான நோய்த்தொற்றுகளுக்கான கிருமிகள் இருக்கும். சில நேரங்களில் அது உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். எச்சரிக்கையாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.