சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
`இது கனவு இல்லம்' -பில்டிங் கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி ரோலக்ஸ் வாட்ச்; ஆச்சர்யப்படுத்திய தொழிலதிபர்
புனேயில் தொழிலதிபர் குர்தீப் தேவ் பத் என்பவர் தனது கனவு இல்லத்தை 9 ஏக்கரில் கட்டியுள்ளார். இக்கட்டிடத்தை கட்டும் ஒப்பந்தத்தை பஞ்சாப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ரூப்ரா என்பவரிடம் கொடுத்திருந்தார்.
ராஜிந்தர் சொன்னபடி இரண்டு ஆண்டுக்குள் பாரம்பரிய ராஜஸ்தானிய கோட்டையை போன்று அழகாக வீட்டை கட்டி ஒப்படைத்திருக்கிறார்.
வீட்டின் நுழைவு வாயிலில் இரண்டு சிங்கம் கர்ச்சிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய பகுதியில் கார்டனும், வீட்டின் இருபுறமும் மரங்கள், செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளது. வெள்ளை கலரில் சுற்றுப்புற தடுப்பு சுவருடன் வீடு மிகவும் பிரமாண்டமான கலை நயத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மைய ஹால் மிகவும் ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்ட தினமும் 200 தொழிலாளர்கள் தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் குர்தீப் தேவ் கூறுகையில், ''இது வெறும் வீடு அல்ல. இது ஒரு பிரமாண்டத்தின் பிம்பம். கவனமாக வடிவமைக்கப்பட்டு, காலத்தால் அழியாத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அர்ப்பணிப்புடன் நான் கேட்டதை விட ராஜிந்தர் சிறப்பாக செய்து முடித்துள்ளார். நான் மட்டுமல்லாது எனது குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக செய்து முடித்துள்ளார்''என்றார்.
இந்த வீட்டை வடிவமைத்து கொடுத்த ராஜிந்தர் இது குறித்து கூறுகையில், "இந்த வீட்டை கட்டுவது சவாலானதாகவும், அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் இருந்தது" என்றார்.
இந்த அளவுக்கு அழகான வீட்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டிமுடித்து கொடுத்த ராஜிந்தருக்கு வீட்டு உரிமையாளர் ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை சன்மானமாக வழங்கி கெளரவித்து இருக்கிறார்.