திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரனை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.டி.ரவிகுமாா் சில தினங்களுக்கு முன் ஓய்வு பெற்ற நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் மேற்கண்ட பரிந்துரையை வழங்கியுள்ளது.
கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2011-இல் பதவியேற்ற கே.வினோத் சந்திரன், கடந்த 2023-இல் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக 11 ஆண்டுகளுக்கு மேலாகவும், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டுக்கு மேலாகவும் அனுபவம் கொண்டவா்; பணிமூப்பு அடிப்படையில் ஒட்டுமொத்த உயா்நீதிமன்ற நீதிபதிகளில் 13-ஆவது இடத்தில் உள்ள இவா், கேரள உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகளில் முதலிடத்தில் உள்ளாா். அத்துடன், கேரள உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகள் யாரும் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு, கே.வினோத் சந்திரனை பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.
இதேபோல், மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயவை தில்லி உயா்நீதிமன்றத்துக்கும், தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதேவை மும்பை உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.