உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்
இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங்க விருப்பப்படுவோர்கூட, கார் ஷோரூம் செல்லாமல் ஆன்லைனில் புக்கிங் செய்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
இந்த புதிய வசதியை ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான ‘ஸெப்டோ’ தொடங்கவுள்ளது. இதற்காக, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்கோடா’வுடன் ஸெப்டோ கைகோர்த்துள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி புதிய ஸ்கோடா காரை வாங்குவதற்கான விவரங்கள் அனைத்தையும் ஸெப்டோ ஆன்லைன் தளத்தில் பதிவு செய்துகொண்டால், வாடிக்கையாளர் புக்கிங் செய்த கார், குறைந்தபட்சமாக வெறும் 10 நிமிடங்களில் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படுமென்றும் சொல்லப்படுகிறது.
வரும் பிப். 8-ஆம் தேதி முதல் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுமென்று ஸ்கோடாவும் ஸெப்டோவும் தெரிவித்துள்ளன. அந்த வகையில், ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடலான ‘கைலாக்’ காரை இந்த வசதியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நடைமுறை எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது குறித்த சந்தேகம் இருந்தாலும், விரைவில் இந்த நடைமுறை குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.