தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா: பட்ஜெட்டில் அறவிப்பு
தமிழக நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத் துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில்,
ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடைவதற்கான பதினெட்டு முன்னுரிமைத் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத் துறையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும். தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் ஒன்றினை நமது அரசு கொண்டுவரும்.
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திடும் முக்கிய நகரங்களான மாமல்லபுரம், திருவண்ணாமலை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணிகளை ஒருங்கிணைத்து முறையாகச் செயல்படுத்திட இந்த நகரங்களுக்கென தனித்தனியே வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கிட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
முதற்கட்டமாக, மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் நகரங்களுக்கென அத்தகைய வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும். மேலும், மாநிலத்திலுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுலாக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தின் மையப் பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஓர் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம். நகர்ப்புர வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் ஆகியவை இடம் பெறும்.
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்திடும் பொருட்டு, மாமல்லபுரம் - மரக்காணம் வரையிலான கடலோரச் சுற்றுலா வழித்தடம், திருச்சி - தஞ்சை - நாகை சோழர்காலச் சுற்றுலா வழித்தடம், மதுரை - சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை - பொள்ளாச்சி வரையிலான இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்த்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.