ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்
செம்பனாா்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த ஊராட்சியில் உள்ள மாதா கோயில் தெரு, கீழக்கரை தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில், இங்கு கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீா் பிரச்னை, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஊராட்சி கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றியும், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் அரும்பாக்கம் கடைவீதியில் விசிக ஒன்றிய பொறுப்பாளா் யோ. ஸ்டாலின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் மகேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா, பெரம்பூா் காவல் ஆய்வாளா் நாகவள்ளி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றி தருவதாக கூறியதன் அடிப்படையில் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.