முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிறகு தனிமையில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு, யாருக்கும் தெரியக்கூடாது என முகத்தை மூடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக தரப்போ அவர் சாதாரணமாக முகத்தை துடைத்தார் எனக் கூறுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், நெல்லை டவுன் கோளரி நாதர் ஆதீனத்தில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்றத்துடன், விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார் . அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``தி.மு.க கரூர் மாநாட்டின் போது மழை பெய்து கலைந்து விட்டது. மாநாட்டின் அறிகுறியே சரியில்லை. எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே அரசியல் செய்வார்கள்.
அதன் அடிப்படையிலேயே தமிழக முதலமைச்சரும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனப் பேசிவருகிறார். கள நிலவரம் முதல்வருக்குத் தெரியும்.
எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்கிறார், துண்டை எடுக்கிறார் என அவரின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது உண்மை, துணை குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறியதும் உண்மை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததும் உண்மை.
தமிழ்நாட்டின் நலன் கருதி சில கோரிக்கைகளை வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அவரும் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.
அ.தி.மு.க-வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் படைக்கவும், பாட்டு எழுதவும் தெரியும். ஆனால் தி.மு.கவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் குற்றம் கண்டுபிடிக்க மட்டும் தான் தெரியும்.
அதனால் இவர்கள் பேசுவதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்ற உடனே டெல்லி காவல்துறையை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பிற்காக மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அந்தப் பாதுகாப்புடன்தான் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷாவும், மோடியும், பா.ஜ.க-வும் கொடுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அவருக்குக் கொடுத்த மரியாதையும் இந்த சந்திப்பின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
ஒரு முதல்வருக்கு என்ன பாதுகாப்பு அமைப்பு வேண்டுமோ அந்தப் பாதுகாப்பு அமைப்பை எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் வருகையை மத்திய அமைச்சர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கொடுத்த மரியாதையின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

அ.தி.மு.க எந்த ரைடுக்கும் பயப்படாது. எப்படி பழனிசாமி, சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் யாருக்கும் நாங்கள் அடிமையும் கிடையாது, யாரைப் பார்த்தும் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
யாரையும் அடிமைப்படுத்தவும் மாட்டோம் எனப் பேசி இருந்தார். அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பலமான கூட்டணி. இதைக் கண்டு பயந்திருக்கிறார்கள்.
விஜயின் அரசியல் அ.தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்படைய போவதெல்லாம் தி.மு.க-வும் அதன் கூட்டணியும்தான். அதிமுக-வுக்கு ஏற்றம் மட்டுமே இருக்கும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.