பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
``கானை மேயராக விடாதீர்கள்'' - சர்ச்சையை கிளப்பிய மும்பை பாஜக தலைவர் பேச்சு
மும்பை மாநகராட்சிக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது.
தற்போது சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேயர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது.
இத்தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க தலைவர்கள் மும்பையில் கூடி ஆலோசித்தனர்.
இதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மாநில பா.ஜ.க நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாதம், ''மாநகராட்சி தேர்தல் என்பது மும்பையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான போர்.

சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவி, தங்களது நிலங்களை மாற்றி வருகின்றனர். சில நகரங்களின் மேயர்களின் குடும்பப்பெயர்களைப் பாருங்கள். மும்பையில் அந்த மாதிரி வேண்டுமா?
லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்த சாதிக் கான் என்பவர் இருக்கிறார். அங்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது." என்று பேசினார்.
அமீத் சாதம் மேலும் பேசுகையில், ''வர்சோவா, மால்வானி முறை எங்கும் பரவக்கூடும். மும்பை மக்களின் வீட்டுக்கு அருகில் பங்களாதேஷ்காரர்கள் இருப்பார்கள்.
ஒவ்வொரு வார்டிலும் ஹரூன் கான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்படலாம். ஏதாவது ஒரு கான் மேயராகலாம். அதனை அனுமதிக்கக்கூடாது'' என்றும் தெரிவித்தார்.
மும்பையில் வர்சோவா மற்றும் மால்வானியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். வர்சோவாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். எனவேதான் வர்சோவா மற்றும் மால்வானியை அமீத் சாதம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அமீத் சாதம் மேலும் பேசுகையில்,''பாஜகவின் போராட்டம் வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கானது. கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த ஒருவர் மும்பை மேயராகப் பொறுப்பேற்றதை உறுதிசெய்ய வேண்டும்''என்று அவர் வலியுறுத்தினார்.
இதில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயைக் கடுமையாக விமர்சனம் செய்தார். மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக கடந்த மாதம் அமீத் சாதம் மும்பை பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.