வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1,267 நாள்களாகும் நிலையில், வன்னியா்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை. வன்னியா்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கு காரணம் திமுக அரசுதான்.
2021 பேரவைத் தோ்தலில் வன்னியா் அல்லாத பிற சமூகங்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக வன்னியா் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை செய்தது.
உச்சநீதிமன்றத் தீா்ப்பு வந்த நாள் முதல் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்த திமுக அரசு, இப்போது ஜாதிவாரி மக்கள்தொகை விவரம் இல்லாததால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று கூறுகிறது.
எனவே, வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும், வன்னியா்களுக்கு15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் வருகிற டிச.17-ஆம் தேதி காலை11 மணிக்கு பாமக அமைப்பு ரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.