நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!
இந்தியாவை சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணைத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ரசாயனங்கள் உற்பத்தி செய்து கடத்தும் நாடுகளின் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், இந்தியா உள்பட 23 நாடுகளில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்து கடத்தப்படும் போதைப்பொருள்களால் அமெரிக்க குடிமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 நாடுகள் எவை?
அந்த பட்டியலில் சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதில், ஆப்கானிஸ்தான், பொலிவியா, பர்மா, கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தவறிவிட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளின் அரசுகளும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறிவிட முடியாது. தடுப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை பிற நாடுகள் மேற்கொண்டிருந்தாலும், போதைப்பொருள் உற்பத்தி அல்லது கடத்தலை சாத்தியமாக்கும் புவியியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை இது சுட்டிக்காட்டுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா, ஆப்கன் மீது கடும் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் டிரம்ப் தாக்கல் செய்த அறிக்கையில், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.
அதில், “சட்டவிரோத ஃபெண்டானில் ரசாயன உற்பத்தியில் சீனா முன்னோடியாக இருக்கிறது. மேலும், செயற்கை போதைப்பொருள்களான நைடசீன்கள் மற்றும் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட உலகளாவிய தொற்றுநோய்களை தூண்டும் முக்கிய விநியோகஸ்தராகவும் சீனா உள்ளது.
இந்த சட்டவிரோத ரசாயன உற்பத்தியை குறைத்து, குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள சீனாவை அமெரிக்கா வலியுறுத்துகிறது.
மேலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் தலிபான்களில் சிலர் தொடர்ந்து லாபம் ஈட்டுகின்றனர். இதனால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் தவறிவிட்டது.
சட்டவிரோத போதைப்பொருள்கள் கடத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை உருவாகியுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் பொது சுகாதார நெருக்கடியும் அடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.