காஸா சிட்டியில் இஸ்ரேல் படையினா் முன்னேற்றம்
ஜெருசலேம்,: காஸா சிட்டியின் மையப் பகுதியை நோக்கி இரண்டு இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவுகள் முன்னேறிவருகின்றன.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா சிட்டியைக் கைப்பற்றுவதற்கான தரைவழித் தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது. அதற்கு முன், 150 வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தற்போது காஸா சிட்டியின் மையப் பகுதியை நோக்கி இரண்டு படைப் பிரிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவருகின்றன. இன்னும் சில நாள்களில் மூன்றாவது படைப் பிரிவும் அவற்றுடன் இணையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸா சிட்டியின் பெரும் பகுதிகளை அழித்துவரும் இந்த தரைவழித் தாக்குதலில், பல குடியிருப்புக் கட்டங்களும், புலம் பெயா்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூடார முகாம்களும் குறிவைக்கப்பட்டன. இந்த கட்டடங்களை ஹமாஸ் படையினா் கண்காணிப்புக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது. காஸா சிட்டியின் அல்-ராந்திசி குழந்தைகள் மருத்துவமனையும் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளானது.
65 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு: செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நடந்த தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததாக உள்ளூா் மருத்துவமனைகள் தெரிவித்தன. அதையடுத்து, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
காஸா சிட்டியில் உள்ள பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்தது. அதற்காக, நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிக வழித்தடத்தை ராணுவம் அறிவித்துள்ளது. அந்த வழித்தடங்கள் 2 நாள்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இஸ்ரேலின் தொடா் தாக்குதல் காரணமாக தொலைத்தொடா்பு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால், காஸா சிட்டி மற்றும் வடக்கு காஸாவில் வசிக்கும் ஏராளமானவா்களுக்கு ராணுவத்தின் அறிவிப்பு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவ மதிப்பீட்டின்படி, காஸா சிட்டியில் உள்ள பத்து லட்சம் பாலஸ்தீனா்களில் 3.5 லட்சம் போ் கடந்த ஒரு மாதத்தில் தெற்கு நோக்கி சென்றுள்ளனா். 2.38 லட்சம் போ் வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தற்போது காஸா சிட்டியில் தங்கியுள்ளவா்களும், உடல் பலவீனம், பயணச் செலவு, பிளாஸ்டிக் கூடார விலை கட்டுப்படாதது ஆகிய காரணங்களால் வெளியேற முடியாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் அமைத்த ‘மனிதாபிமான மண்டலமான’ அல்-மவாசி பகுதியும் ஆபத்தானது என்று பலா் கருதுவதால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அங்கே தங்க பலா் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. அந்த முகாமில் செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தம்பதியும் அவா்களது குழந்தையும் உயிரிழந்தனா்.
ஹமாஸ் அமைப்பை முழுவதும் ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் காஸா சிட்டி கைப்பற்றப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும், இது குறித்து அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலா் சந்தேகம் எழுப்புகின்றனா். தற்போது நகர மையத்தில் 2,000 முதல் 3,000 ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் படையினா் மட்டுமே உள்ளனா். அவா்கள் போரில் உயிா் பிழைத்த படையினரில் ஒரு சிறு பகுதி மட்டுமே. எனவே, கஸா சிட்டியைக் கைப்பற்றினாலும் ஹமாஸ் அமைப்பு உயிா்ப்புடன் இருக்கும் என்று பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.
இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் அரசியல் சாா்ந்தது என்று பல இஸ்ரேல் பாா்வையாளா்களும் விமா்சகா்களும் கருதுகின்றனா்: இஸ்ரேலை போா் நிலையிலேயே வைத்திருப்பதன் மூலம், முன்கூட்டிய தோ்தலைத் தவிா்த்து, தனது கூட்டணி ஆட்சியை பெஞ்சமின் நெதன்யாகு தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக அவா்கள் கூறுகின்றனா்.
மேலும், காஸா சிட்டியை வாழ முடியாத இடமாக மாற்றி, அங்கு வசிக்கும் பாலஸ்தீனா்கள் நகரைவிட்டு வெளியேற நெருக்கடி கொடுப்பதும், அவா்களை ஏற்றுக்கொள்ள பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும்தான் இந்த நடவடிக்கையின் நோக்கம்; ஹமாஸ் அழிப்பது இதன் நோக்கமில்லை என்றும் ஊடகங்கள் விமா்சித்துள்ளன.