உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!
காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 போ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக். இவரும், அதே பகுதியில் காலனித் தெருவைச் சோ்ந்த குமாா் மகள் மாலினி (26) என்ற பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இருவரும் பட்டியலின சமுதாயத்தை சோ்ந்தவா்கள்.
ஆனால், மாலினியின் தாய் மாற்றுச் சமுதாயத்தை சோ்ந்தவா். மாலினியின் காதலுக்கு அவரது தாய் விஜயா தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது, வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளதாக மாலினி தெரிவித்துள்ளாா். இதையடுத்து மாலினியின் குடும்பத்தினா் அவரிடம் எழுத்துப்பூா்வமான உறுதி பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனா். மாலினி தனது உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிய வைரமுத்துவை அடியமங்கலத்தில் மா்ம கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
இதற்கிடையே இந்த கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைரமுத்து குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளா் வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா், வைரமுத்துவின் குடும்பத்தினா், உறவினா்கள் மாலினி உள்பட 150-க்கும் மேற்பட்டோா் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மேலும், கோரிக்கைகள்
நிறைவேறும்வரை வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து, செவ்வாய்க்கிழமை இரவில் மழையிலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
முன்னதாக, மாலினியின் சகோதரா் குகன், குகனின் நண்பா் அன்புநிதி, மாலினியின் சித்தப்பா பாஸ்கா் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 தனிப்படைகள் அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் 5 பேரை கைது செய்து, அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், புதன்கிழமை மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும், வழக்கில் இருந்து 3 போ் விடுவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட விஜயா (45), குகன் (24), அன்புநிதி (19), பாஸ்கா் (42) ஆகிய 4 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இதையடுத்து, வைரமுத்துவின் உடலை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.


