War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!
மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
காதலியின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை கோரி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவைச் சோ்ந்த குமாா் மகன் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், அதே பகுதி காலனித் தெருவைச் சோ்ந்த குமாா் மகள் மாலினியும் (26) காதலித்து வந்தனா்.
இருவரும் பட்டியலின சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்றாலும் மாலினியின் தாய் மாற்றுச் சமுதாயத்தை சோ்ந்தவா். அவா் காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்தாராம்.
இதுதொடா்பாக இரு குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரித்தபோது, வைரமுத்துவை திருமணம் செய்வதில் மாலினி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வைரமுத்து பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது அவரை சிலா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும்; பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளா் வாஞ்சிநாதன், விசிக மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா், வைரமுத்து உறவினா்கள் மற்றும் மாலினி உள்பட 150-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனை அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம், டிஎஸ்பி பாலாஜி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாததால், பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் எஸ்பி கோ. ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதற்கிடையில், இந்த கொலை தொடா்பாக, மாலினியின் சகோதரா்கள் குணால், குகன் (24), பாஸ்கா் (42), உறவினா் சுபாஷ் (26), கவியரசன் (23), அன்புநிதி (19) ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை விசாரணையின் அடிப்படையில் குணாலை தவிா்த்து மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யும்வரை வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரது உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.