தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?
கத்தார் மீது தாக்குதல்:
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கத்தாரும், எகிப்தும் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
அதன் ஒருபகுதியாக கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது கத்தார்.
கத்தாரில் இருக்கும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களைக் கொலை செய்யும் திட்டத்துடன் இஸ்ரேல் இராணுவம் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. அதனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக ஹமாஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
அரபு நாடுகள் அதிர்ச்சி:
அதே நேரம் அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருக்கும் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் சர்வதேச சட்டவிதி மீறல்கள் தொடர்வதை உலக நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் (15-ம் தேதி) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், இஸ்ரேலை அங்கீகரித்த ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், மொராக்கோ உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அவசரக் கூட்ட முடிவு:
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கத்தார் நாட்டின் தலைவர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, ``இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினரைக் கொல்ல முயல்பவர்கள், பேச்சுவார்த்தையைத் தடுக்கவே நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், ``நாளை வேறு எந்த அரபு அல்லது இஸ்லாமியத் தலைநகரும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். நம் முன் இருக்கும் தேர்வு தெளிவாக உள்ளது. நாம் ஒன்றுபட வேண்டும்" எனத் தன் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ``இஸ்ரேலுடன் உள்ள அனைத்துத் தூதரக மற்றும் வர்த்தக உறவுகளையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் கட்டுபாடற்ற முறையில் இஸ்ரேல் செயல்படுகிறது.
இந்தக் கூட்டம் வெறும் கண்டன அறிக்கையுடன் நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஏனென்றால் கண்டனங்கள் இஸ்ரேலின் ராக்கெட்டுகளை நிறுத்தாது. அறிக்கைகள் பாலஸ்தீனத்தை விடுவிக்காது. உறுதியான தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

கூட்டறிக்கை:
இந்தக் அவசரக் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ``பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளைத் தடுக்க, அனைத்து நாடுகளும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இஸ்ரேலுடனான தூதரக மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்வதுடன், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலின் உறுப்புரிமையை நிறுத்திவைப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்." என்றத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ``இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.
அதே நேரம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கத்தாரை இனி தாக்க மாட்டார் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். விரைவில் கத்தார் பிரதமரை சந்திக்கவிருக்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.
கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.