பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது செளதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் உள்ளிட்டோரும் உடன் சென்றது பேசுபொருளானது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையொப்பமாகியுள்ளது. பாகிஸ்தான் அல்லது செளதியை பிற நாடுகள் தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகின்றது.
இதையடுத்து, கத்தாருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, கடந்த வாரம் அந்நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் பயணம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது, செளதியில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான், செளதி அரேபியா இடையே கொண்டு வரப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில், பிற மத்திய கிழக்கு நாடுகளையும் இணைத்து நேட்டோ போன்ற அமைப்பு உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் - செளதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தால், இனி பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் செளதியும் பதிலடி கொடுக்கும் என்ற சூழல் நிலவுகிறது.