விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்ற...
பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தான் - செளதி அரேபியா இடையே கையெழுத்தான உடன்பாடு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் - செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பாகிஸ்தான் அல்லது செளதி அரேபியா மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது இரண்டு நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், நேட்டோ போன்ற கூட்டமைப்பை மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து உருவாக்கும் பாகிஸ்தானின் முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”செளதி அரேபியா - பாகிஸ்தான் இடையே முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது பரிசீலனையில் இருந்தது மத்திய அரசு அறிந்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு தாக்கம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்வோம்.
நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதையும், அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதையும் மத்திய அரசு உறுதியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.