காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!
திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களைப் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில், காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் சுமார் 6,000 -க்கும் அதிகமானோரை நீக்க முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்போது, தலைமைத் தேர்தல் அதிகாரியை தொடர்புபடுத்து ராகுல் காந்தி பேசியதாவது:
“ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களைப் பாதுகாக்கிறார். நான் இன்று பகிர்ந்துள்ள ஆதாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஞானேஷ் குமார் மீது நான் ஏன் இவ்வளவு நேரடியான குற்றச்சாட்டை முன்வைக்கிறேன் என்பதை விளக்குகிறேன்.
வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக கர்நாடக சிஐடி தரப்பில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 18 முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எளிய தகவல்கள் மட்டுமே கோரப்பட்டது. ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஐபி முகவரி, விண்ணப்பம் பெறுவதற்கு அளிக்கப்பட்ட ஓடிபி தடங்கள் உள்ளிட்டவை மட்டுமே கோரப்பட்டது, ஆனால் பதில் வழங்கவில்லை. இதனைச் செய்தவர்களை ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
ஜனநாயக அமைப்பில் பங்கேற்பது தான் எனது வேலை. பாதுகாப்பது எனது வேலை அல்ல. தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களின் வேலை அது. அவர்கள் பாதுகாக்காததால், அந்த வேலையை நான் செய்கிறேன். அனைத்து இடங்களிலும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தல் ஆணையத்துக்குள் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கத் தொடங்கிவிட்டனர். இது நிற்கப் போவதில்லை.
இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் மக்களைப் பாதுகாப்பதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு 100% குண்டு துளைக்காத ஆதாரத்தை இங்கே வழங்கியுள்ளோம். இந்த தொலைபேசிகளின் தரவு, இந்த ஓடிபி-களை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.