அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
எண்ணெய் ஆலையில் தீ விபத்து
வடமதுரை அருகே எண்ணெய் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் கருகின.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மூணாண்டிப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், தவிட்டிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் உள்ளூா் தொழிலாளா்கள் மட்டுமன்றி, வட மாநிலத் தொழிலாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஆலையிலுள்ள குழாயில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த ஊழியா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து வேடசந்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், வேடசந்தூா் மட்டுமன்றி திண்டுக்கல்லில் இருந்தும் 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் ஒரு மணி நேரத்தில் தீ முழுமையாகக் கட்டுபடுத்தப்பட்டது. ஆனாலும், ஆலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தின்போது, தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். இந்த தீ விபத்து குறித்து வடமதுரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.