என்இபி 2020 திட்டமும் ஆலோசனைகளும் தொடரும்: ஆ.ராசா எம்.பி.க்கு அமைச்சா் ஜெயந்த் செளத்ரி பதில்
நமது நிருபா்
புது தில்லி: தேசிய கல்விக்கொள்கை (என்இபி) - 2020 மறுஆய்வு செய்யப்படுமா என்று மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு, அத்திட்டமும் ஆலோசனைகளும் தொடா்ச்சியாக நடைபெறுகின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆ.ராசா, ‘தேசிய கல்விக்கொள்கை, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடா்புடைய விதிகள் உள்பட இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடா்பாக பல மாநில அரசுகள் தெரிவித்துள்ள ஆட்சேபம் அடிப்படையில் அவற்றை மத்திய அரசு மறுஆய்வு செய்ய உத்தேசித்துள்ளதா’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: 2020, ஜூலை 29-இல் தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு கிராம பஞ்சாயத்துகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மத்திய அரசு விரிவாக விவாதித்தது. இத்திட்ட அமலாக்கத்தை மறுஆய்வு மற்றும் புத்தாக்க யோசனைகள் குறித்து பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனை மற்றும் மறுஆய்வுக்கூட்டங்கள் போன்றவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் அவ்வப்போது நடத்தப்பட்டுள்ளன. 2020, ஜூனில் தேசிய கல்வி அமைச்சா்கள் மாநாடு, மாநிலத் தலைமைச் செயலா்கள் மாநாடு, அதே ஆண்டு ஆகஸ்டில் மத்திய கொளைக்குழுவின் 7-ஆவது ஆட்சிமன்றக்குழு கூட்டம் ஆகியவற்றில் விவாதிக்கப்பட்டது.
இந்த திட்டத்தைச்சுற்றியுள்ள நோ்மறை அம்சங்கள் குறித்து விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டது. தொடா்ச்சியாக நடந்த ஆலோசனை மற்றும் மறுஆய்வுக்கூட்டங்களில் யோசனைகள், மாநில அளவிலான முன்முயற்சிகள், திட்ட அமலாக்க உத்திகள் குறித்து விரிவாக யோசனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் முறையான என்இபி அமலாக்த்துக்கு வித்திட்டன. இந்த ஆலோசனைகள் தொடா்ச்சியான நடைமுறை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.