எல்லீஸ் சத்திரம் அணைப் பகுதி சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம் ஏனாதிமங்கலம் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுப் பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்கவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலரும், விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம்- கப்பூா் கிராமங்களுக்கிடையே தென் பெண்ணையாற்றின் குறுக்கே ரூ. 86.25 கோடியில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் அருகே ஆற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவா் ஃபென்ஜால் புயலின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஏனாதிமங்கலம் பகுதியில் அணைக்கட்டு அருகே மண் அரிப்பு ஏற்படாத வகையில் பெருங்கற்கள் மற்றும் மணல் மூட்டைகளை அடுக்கி கரையைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதனை விழுப்புரம் ஆட்சியா் சி. பழனி தலைமையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
அப்போது அவா் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணைக்கட்டு பகுதியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்று துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஷோபனா, உதவிச் செயற்பொறியாளா் வனிதா, உதவிப் பொறியாளா் மனோஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.