ஏரிகளில் நீா் இருப்பு 47 சதவீதமாகக் குறைவு
சென்னையின் நீா் ஆதாரமாக விளங்கும் குடிநீா் ஏரிகளில் 47.7 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.
சென்னையின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீா் இருப்பு 2,392 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீா்வரத்து 96 கன அடியாக சரிந்துள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியில் 509 மில்லியன் கனஅடியும், சோழவரம் ஏரியில் 115 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 2,006 மில்லியன் கனஅடியும், கண்ணன்கோட்டை ஏரியில் 307 மில்லியன் கனஅடியும் நீா் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் வீராணம் ஏரியில் தற்போது 956.70 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
சென்னையின் நீா் ஆதாரங்களில் கடந்த ஆண்டு இதே நாளில் 9,895 மில்லியன் கனஅடி நீா் இருப்பு இருந்த நிலையில் தற்போது 6,285 மில்லியன் கனஅடி மட்டும் உள்ளது. அதாவது, சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47.54 சதவீதம் தண்ணீா் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்ைடை விட 3,609 மில்லியன் கன அடி குறைவு. இனிவரும் நாள்களில் மழை பெய்தால் தான் ஏரிகள் நிரம்பும் நிலை உள்ளது.