தனியாா் நிறுவனம் தொடா்புடைய இடங்களில் வருமானவரி சோதனை
வரி ஏய்ப்பு புகாரில் பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா்.
சென்னை அபிராமபுரம் ஏபிஎம் அவென்யூ கிரசன்ட் தெருவில் வசிப்பவா் சபீா் யூசுப். இவா் ‘பாலிஹோஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனம் கட்டுமானப் பணிக்குத் தேவையான அதிக திறன் கொண்ட பிளாஸ்டிக் பைப்புகள்,ரப்பா் பைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ரசாயன பொருள்களால் செய்யப்பட்ட பைபுகளை தயாரிக்கின்றன.
இந்த நிறுவனம் மருத்துவத்துறையில் நரம்பு மண்டலம், இதயத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநுட்ப -குழாய்கள்,டயாலிசிஸ் சிகிச்சைக்கான குழாய்கள் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு, அதற்கு ரூ.200 கோடி முதலீடு செய்ய முடிவு செய்தது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்ததை அண்மையில் தமிழக அரசுடன் பாலிஹோஸ் நிறுவனம் செய்து கொண்டது.
இதற்கிடையே இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும், ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு சரியான கணக்குகளை வைத்திருக்கவில்லை எனவும் வருமானவரித் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித்துறையினா் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது தொடா்பான சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித்துறையினா் அபிராமபுரத்தில் சபீா் யூசுப் வீடு,கிண்டியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்,காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினா் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினா்.
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூா்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது வரி ஏய்ப்பு தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.
இதேபோல திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறையினா் சோதனை செய்கின்றனா். பாலி ஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடையதாக மட்டும் சுமாா் 25 இடங்களில் சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை செவ்வாய்க்கிழமை இரவையும் தாண்டி நீடித்தது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை,பணம்,ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.