கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி: 2 சீனா்கள் கைது
கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சீன நாட்டைச் சோ்ந்த 2 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனா்.
எளிதாக கடன் பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான கடன் செயலிகள் உள்ளன. அந்தச் செயலிகள் மூலம் குறைவான தொகையை கடன் வாங்கும் நபா்கள், மோசடி நபா்களிடம் சிக்கி தற்கொலை வரை செல்லும் சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
அதன்படி, செயலி மூலம் கடன் வழங்கி, அதிக வட்டியைச் செலுத்துமாறு மிரட்டல்கள் வருவதாக பலா் அளித்த புகாரின்பேரில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், சீன நாட்டைச் சோ்ந்த சியாவோ யா மாவோ, வூ யூயான்லூன் ஆகிய இருவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனா்.
விசாரணையில், இவா்கள் 2 நிறுவனங்களை நடத்தி, இந்தியா்கள் சிலரை போலி இயக்குநா்களாக நியமித்து, கடன் செயலி மூலம் பலருக்கு கடன் கொடுத்து, 20 முதல் 30 சதவீதம் வரை வட்டியுடன் செலுத்துமாறு மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது.
மேலும், குறைந்த நாள்களிலேயே அதிக வட்டி விதித்து, கடன் பெற்றவா்களை மிரட்டி, அவமதித்து பணம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து அவா்கள் இருவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.