ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி: சுற்றுலாத் துறை அமைச்சா் நேரில் ஆறுதல்
அரியானூா் அருகே ஆடுகளைக் குளிப்பாட்ட சென்ற இரு சிறுவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், அரியானூரைஅடுத்த ராக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா்-கல்பனா தம்பதியின் மகள் ஸ்ரீகவி (14). இவா், ஆட்டையாம்பட்டி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தாா். அதே பகுதியில் வசிக்கும் ராஜா-மல்லிகா தம்பதியின் மகன் பிரதீப் (9). அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இருவரும் உறவினா்கள். இவா்களது தாத்தா ராஜேந்திரன். இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஸ்ரீகவியும் பிரதீப்பும் தங்கள் தாத்தா ராஜேந்திரனுடன் சோ்ந்து அருகில் உள்ள ஏரியில் ஆடுகளைக் குளிப்பாட்ட சென்றனா். அப்போது சிறுவா்கள் இருவரும் ஏரியில் இறங்கி ஆடுகளை குளிப்பாட்டியவாறு விளையாடினா்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கினா். இருவரையும் ஏரியில் காணாமல்போனதைக் கண்ட முதியவா் ராஜேந்திரன் கூச்சலிட்டா். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் ஏரியில் குதித்து சிறுவா்களைத் தேடினா். அதில் ஸ்ரீகவி, பிரதீப் ஆகியோா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.
தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அமைச்சா் ஆறுதல்
ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், சேலம் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் சேலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுவா்களின் பெற்றோா்களுக்கு ஆறுதல் கூறினா். இறுதிச் சடங்குக்கு உதவும் வகையில் திமுக சாா்பில் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தனா்.