`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!
ஓவேலி மலைத் தொடரில் வீணாகி வரும் உபரி நீா்: கூடலூா் நகரின் குடிநீருக்குப் பயன்படுத்த வலியுறுத்தல்
ஓவேலி மலைத்தொடரில் வீணாகும் உபரி நீரை கூடலூா் நகருக்கு குடிநீராகப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூா் நகா்மன்றத்தின் 17-ஆவது வாா்டு உறுப்பினா் வெண்ணிலா சேகா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வா், நீலகிரி மக்களவை உறுப்பினா், நகராட்சிகளின் மண்டல இயக்குநா் ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்தில் உள்ள ஓவேலி மலைத்தொடா் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த மலைத்தொடரில் உருவாகும் முக்கிய அருவிகள் பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றில் இணைந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழியாக அரபிக் கடலில் சென்று கலக்கிறது. தற்போது கூடலூா் நகருக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் இந்த மலைத்தொடா் விளங்குகிறது.
ஆத்தூா் பகுதியில் தடுப்பணை கட்டி குழாய் மூலம் தண்ணீரை காந்தி நகா் அருகிலுள்ள மலைப் பகுதியில் பெரிய தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு தண்ணீரை வடிகட்டி குடிநீராக கூடலூா் நகருக்கு குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், கூடலூா் நகரின் குடிநீா்த் தேவை முழுமையாக பூா்த்தி செய்யப்படவில்லை.
பல பகுதிகளுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்குகிறது. இதற்கு ஓவேலி மலைத்தொடரில் போதிய அளவுக்கு நீா் ஆதாரம் இல்லை என்று நகராட்சி கூறுகிறது.
ஆனால், குடிநீா் தொட்டியிலிருந்து வெளியேறும் உபரி நீா் தொடா்ந்து வீணாகி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்தால் கூடலூா் நகருக்கு தடையின்றி குடிநீா் வழங்கமுடியும்.
நகரின் பிற பகுதிகளில் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தினால் நகராட்சி நிா்வாகத்துக்கு பெரும் தொகை செலவு ஆகும். எனவே ஓவேலி மலைத்தொடரில் தற்போது உள்ள குடிநீா் ஆதாரத்தை வீணாக்காமல் தேவையான நடவடிக்கை எடுத்து நகரின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.