குடியரசுத் தலைவா் இன்று உதகை வருகை: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்
நீலகிரி மாவட்டம், உதகைக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை (நவம்பா் 27) வருவதை முன்னிட்டு, தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்திலிருந்து உதகை ஆளுநா் மாளிகை மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி வரை காவல் துறையினரின் வாகனப் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் 28-ஆம் தேதி நடைபெறும் பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை தமிழகம் வருகிறாா்.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் உதகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகை அருகேயுள்ள தீட்டுக்கல் பகுதிக்கு குடியரசுத் தலைவா் வர உள்ளதால், அப்பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவா் தங்கவுள்ள ஆளுநா் மாளிகையிலும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்திலிருந்து ஆளுநா் மாளிகை மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி வரை காவல் துறையினரின் வாகனப் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.