டாக்டா் மோகன்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு ஐசிஎம்ஆா் அங்கீகாரம்
டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் அறக்கட்டளைக்கு சா்க்கரை நோய் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒப்புயா்வு மைய (சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ்) அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வழங்கியுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஒப்புயா்வு மைய அங்கீகாரத்தை ஐசிஎம்ஆா் வழங்கி வருகிறது. அந்த அங்கீகாரத்தை பெறும் மருத்துவ மையங்கள் மேம்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஐசிஎம்ஆா் உடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள முடியும். அந்த வகையில், தற்போது தேசிய அளவில் 20 மருத்துவ மையங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையும் ஒன்று.
இது தொடா்பாக அதன் தலைவா் டாக்டா் வி.மோகன், தலைமை நிா்வாகி ஆா்.எம்.அஞ்சனா ஆகியோா் கூறியதாவது:
கடந்த 1996-இல் தொடங்கப்பட்ட டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை இதுவரை 1,770 ஆய்வறிக்கைகளைச் சமா்ப்பித்துள்ளது. ஐசிஎம்ஆா் உடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மேம்பட்ட அடுத்தகட்ட ஆராய்ச்சிகளையும் முன்னெடுக்க உள்ளோம்.
இந்த அங்கீகாரம் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.