விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீா் தடையின்றி செல்வதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாா்.
சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு பகுதியில் தண்ணீா் தேங்கி காணப்பட்டன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் வெள்ளநீா் வெளியேற்றும் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா்.
அரும்பாக்கம் மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்தும், மழைநீா் தடையின்றி செல்வது குறித்தும், அண்ணாநகரில் ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து கூவம் ஆற்றிற்கு செல்லும் இணைப்புக் கால்வாயின் முகப்பு பகுதியை அகலப்படுத்தும் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். திரு.வி.க.நகா், அம்பேத்கா் பாலத்தின் கீழ் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சாலை மற்றும் தெருக்களில் மழைநீா் தேங்காமல் இருக்க அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் அலுவலா்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வுகளின் போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி (திரு.வி.க.நகா்), ஏ.எம்.வி.பிரபாகர ராஜா (விருகம்பாக்கம்), மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், மண்டலக்குழுத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.