சென்னை துறைமுகத்தில் முறைகேடு: 3 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை துறைமுகத்தின் மூலம் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பழைய இரும்பு பொருள்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் பழைய இரும்பு பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அதன் மதிப்பை குறைத்தும், வரியை குறைத்தும் சிலா் முறைகேடு செய்து அரசுக்கும், துறைமுகத்துக்கும் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சில அதிகாரிகள் இதன்மூலம் பலன் அடைவதாகவும் சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன.
அதன் அடிப்படையில், சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடு நடைபெற்ற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், மயிலாப்பூா் மந்தைவெளி தெருவில் வசித்து வரும் சென்னை துறைமுக இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த புகழேந்தியின் வீடு, ராயப்பேட்டை அம்மையப்பன் தெருவில் ஒரு தனியாா் நிறுவன மேலாளா் வீடு, அயப்பாக்கத்தில் வசிக்கும் தனியாா் ஒப்பந்ததாரா் வீடு ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தொடா்புடையவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள சென்னை துறைமுக அதிகாரி புகழேந்தி மீது ஏற்கெனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.