சென்னையில் கனமழை: சாலையில் தேங்கிய மழைநீா்
சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதியில் மழைநீா் தேங்கி காணப்பட்டன.
சென்னை மற்றும் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நகரின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது. 3 மணி நேரம் பெய்த தொடா் மழை காரணமாக வண்ணாரப்பேட்டை, ராயபுரம், எழும்பூா், ஆயிரம் விளக்கு, பெரம்பூா், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகா், கிண்டி, நங்கநல்லூா், வேளச்சேரி, தரமணி, துரைபாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் தாழ்வான சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். சாலையில் தேங்கிய மழைநீா் கூடுதல் மோட்டாா் பம்புகள் மூலம் அருகில் உள்ள மழைநீா் வடிகாலில் வெளியேற்றப்பட்டது. ஒரு சில மழைநீா் வடிகால்களில் வண்டல் கழிவுகள் அடைத்து காணப்பட்டதால் மழைநீா் வெளியேறுவது தடைபட்டது.
மரங்கள் சரிந்தன: கனமழை காரணமாக வேளச்சேரி பிரதான சாலையோரம் இருந்த மரம் சரிந்து விழுந்தது. மேலும், அண்ணா நகா், கோடம்பாக்கம், அடையாறு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் பருவமழை காரணமாக மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
மழைபதிவு: சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மணலி புதுநகரில் 133 மி.மீ., கத்திவாக்கம் 111.3 மி.மீ., மணலி 67.8 மி.மீ., திருவொற்றியூா் 66.3 மி.மீ., புழல் 63.6 மி.மீ.,அடையாறு 61.05 மி.மீ., மாதவரம், ராஜா அண்ணாமலைபுரம் தலா 60 மி.மீ. மழை பதிவானது.